ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சமூகநலத்துறை சார்பில் தையல் தொழிலாளர்கள் மகளிர் மேம்பாட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்தியாவில் முதன்முதலாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2500 வழங்க முதலமைச்சர் பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். வெள்ளை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் நாளை (டிசம்பர் 21) கடைசி என்பதால், அனைவரும் அதை மாற்றிக்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பொங்கல் பரிசு இலவசங்கள் கிடைக்கும்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாடு அரசின் கொள்கை. இருந்தாலும், இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 313 பேர் மருத்துவர்களாகவும் 102 பேர் பல் மருத்துவர்களாகவும் என 415 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "தமிழ்நாட்டு வரலாற்றில் பொங்கல் பரிசாக ரூ. 2500 வழங்கி முதலமைச்சர் வரலாறு படைத்துள்ளார். கிராமம்தோறும் 2000 மினி கிளினிக் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை எந்த சக்தியாலும் மாற்றியமைக்க முடியாது. மீண்டும் முதலமைச்சராக பழனிசாமியே அரியணையில் ஏறுவார்" என்றார்.