கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் பகுதியில் கடந்த எட்டு மாத காலமாக மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் ஒருவர் சாலையோரங்களில் சுற்றி திரிந்தார். அவரின் உடலில் காயங்களும் காணப்பட்டன.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஷிவாகர் என்பவர் தாய்மை அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றி தகவல் கிடைத்ததும், ஈரோட்டை சேர்ந்த தாய்மை அறக்கட்டளை நிறுவனர் மணிமேகலை, அவருடன் புவனேஷ், சரவணன் ஆகியோர் கோமங்கலம் புதூர் வந்து மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரை மீட்டனர்.
அவருக்கு சிகை அலங்காரம் செய்து, குளிக்க வைத்து புத்தாடை அணிவிக்கப்பட்டது.
பின்னர், புதுக்கோட்டையில் உள்ள ஆதரவற்றோர் மறுவாழ்வு இல்லத்தில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றனர்.
பல மாதங்களாக கோமங்கலம் புதூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞருக்கு மறுவாழ்வு கொடுத்த ஈரநெஞ்சம் கொண்ட ஈரோடு பெண்மணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: சுற்றுப்புறத்தை பாழாக்கும் மதுபாட்டில்கள்- பயனுள்ளதாக மாற்றும் பட்டதாரி பெண்!