ஈரோடு: கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குள்ளம்பாளையம் மற்றும் வேளண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் உள்பட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.
இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2500 வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, “பள்ளிகள் திறக்க பெற்றோர், மாணவர்களிடம் கருத்துக் கேட்பு இன்று முதல் தொடங்கி இந்த வாரம் இறுதி வரை நடைபெறும். கூடுதலாக மாணவர்கள் வருகின்றபோது தான் கழிப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும்.
தற்போது குறைந்தளவு வகுப்பறைகள் திறக்க மட்டுமே முதலமைச்சர் முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறார். பள்ளி திறந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “கல்விக்கடன் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு தேர்தல் வருகின்றபோது தான் தெரியும். பொங்கல் பண்டிகைக்கு இணையவழி வகுப்பு விடுமுறை குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்” என்று கூறினார்.
ஸ்டாலின் எப்பொழுதுமே வருங்கால முதலமைச்சராக மட்டுமே இருக்க முடியும் என்ற அழகிரியின் கருத்து குறித்த கேள்விக்கு, ‘நான் இதற்கெல்லாம் பதில் சொல்வதில்லை’ என்று பதிலளித்தார்.