மதுரை மேற்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் செல்லூர் ராஜு மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். அவர் 68 ஆயிரத்து 406 வாக்குகள் பெற்று மூன்றாயிரத்து 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட சின்னம்மாள் 63 ஆயிரத்து 214 வாக்குகளும் நாதக சார்பில் போட்டியிட்ட வெற்றி குமரன் 15 ஆயிரத்து 784 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மூன்றாவது முறையாக வெற்றி:
2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி வாகை சூடி மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.
குறிப்பாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கோ. தளபதியை சுமார் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
எம்ஜிஆர் போட்டியிட்ட தொகுதி
மதுரை மேற்குத் தொகுதி 1980ஆம் ஆண்டில் எம்ஜிஆர் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அப்போதிருந்தே கவனம் பெற்ற தொகுதியாக இருக்கிறது. அதே தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்துவரும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மக்களின் செல்வாக்கு அதிகம்.