ஈரோடு: கோபிசெட்டிபாளையம் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவந்தவர் ராமமூர்த்தி. கவுந்தப்பாடி பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டுவந்தார். திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவரை அணுகியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
காவலர் ராமமூர்த்திக்கு நேற்று (ஜூன் 2) மூச்சுத்திணறல் ஏற்படவே, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார்.
மூச்சுத்திணறல் அதிகம் இருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
பெருந்துறை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே ராமமூர்த்தி உயிரிழந்தார். இவர் இறப்புச் செய்தி அறிந்த சக காவலர்கள் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.