காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் நிகழ்ச்சி தற்போது வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள்,அத்திவரதரை தரிசிக்கும் வகையில், திருச்சி பெரிய கடை தெருவில் இருக்கும் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் அத்திவரதர் நிகழச்சி நடைபெற்று வருகிறது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கைலாசநாதருக்கு ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டு, சோமவாரத்தில் கைலாசநாதருக்கு விபூதி அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு அத்திவரதர் சேவை புரிந்துவரும் நிலையில், பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து செல்ல ஏதுவாக அத்திவரதரை சயன கோலம், நின்ற கோலத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். இதனை காண திரளான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.