ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளான புங்கார், தொப்பம்பாளையம், தொட்டம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று(பிப்.20) காலை சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. நீண்ட நாட்கள் கழித்து மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
தற்போது பெய்த மழை விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பவானிசாகர் வனப் பகுதியிலும் பரவலாக மழை பெய்ததால் வனப்பகுதிகளில் தீப்பிடிக்கும் அபாயம் குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
அதே போல் தமிழ்நாடு - கர்நாடக எல்லையான சாம்ராஜ் மாவட்டத்தில் உள்ள குண்டேல்பேட், நாகுஹள்ளி, நல்லூர், ஜோதிகாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (பிப்.19) சூறைகாற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் நாகுஹள்ளியில் உள்ள ஓட்டு வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. சூறைக்காற்றினால் அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 50 ஆயிரம் வாழை மரங்கள் சரிந்து விழுந்தன. மேலும் மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நூறாண்டு கனவு: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் எடப்பாடி!