ஈரோடு: கோவையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இன்று(ஆக.12) மதியம் ஆம்னி காரில் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த நல்லூர், தனியார் பள்ளி அருகே சென்றபோது ஆம்னி காரின் ஓட்டுநர் அஜாக்கிரதையாக காரை வலது புறம் திருப்ப முயன்றுள்ளார்.
அப்போது பின்னால் கோவையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஆம்னி காரின் மீது மோதியது. மோதிய வேகத்தில் வலதுபுறம் சாலையோரம் இருந்த குழிக்குள் ஆம்னி கார் தலை குப்புற விழுந்தது. அதே வேகத்தில் குழிக்குள் இறங்கி நின்ற அரசுப்பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டது. ஆம்னி காரின் மேல் அரசுப்பேருந்தின் முன் சக்கரம் ஏறி நின்றது.
இதில் ஆம்னி காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் கதவுகள் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த 2 பேர் லேசான காயங்களுடன் பின்புற கண்ணாடியை உடைத்து வெளியே தப்பித்த நிலையில், ஆம்னி காரின் ஓட்டுநர் காருக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இரண்டு ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து, ஒரு ஜேசிபி மூலம் அரசுப்பேருந்தை நகர்த்தி மற்றொரு ஜேசிபி மூலம் ஆம்னி காரை வெளியே இழுத்து மீட்டனர். காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட ஓட்டுநர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார்.
உடனடியாக 3 பேரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசுப்பேருந்தில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி தப்பினர். விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் அப்பகுதி மக்கள் சமயோசிதமாக செயல்பட்டு ஜேசிபி மூலம் ஆம்னி கார் ஓட்டுநரை மீட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக ஏரியில் மணல் அள்ளிய லாரிகளை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்