ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் வனத்தையொட்டிள்ள கிராமங்களில் புலி புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில் சில வாரங்களாக வனத்தையொட்டியுள்ள சேஷன்நகர் கிராமத்தில் விவசாயிகள் பராமரித்து வந்த 4 மாடுகள், 3 ஆடுகள், 2 காவல் நாய்களை கடித்துக் கொன்றுள்ளது. புலியின் அச்சுறுத்தலால் பகலில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமத்துள்ளாகியுள்ளனர்.
இதனால் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையின்படி வனத்துறையினர் ட்ரோன் மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அதன் நடமாடும் பாதையில் 4 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேஷன்நகர் வனத்தில் குட்டியுடன் புலி உலா வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து தாளவாடி வனச்சரகர் சதீஷ் கூறுகையில், "புலி நடமாட்டம் குறித்த வீடியோவை ஆராய்ந்த போது, அது இங்குள்ள புலி அல்ல, வேறு பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்
இதையும் படிங்க: உதகையில் சுற்றித் திரிந்த கரடி: சிசிடிவி காட்சி வெளியீடு