ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகைப்பூ சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. இங்கு இரண்டாயிரம் விவசாயிகள் பூக்களை உற்பத்தி செய்து சத்தியமங்கலத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக பூக்களை வாங்க ஆளில்லாத காரணத்தில் விவசாயிகள் பூக்களை குளத்தில் கொட்டும் நிலை ஏற்பட்டது. இதன்பின் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதால், சத்தியமங்கலத்தில் இருந்து வேன் மூலம் கேரளா, கர்நாடகவிற்கு பூக்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் பூக்கள் விலை கிலோ ரூ.350க்கு விற்கப்பட்டது.
இந்த மகிழ்ச்சி விவசாயிகளுக்கு நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. தற்போது கர்நாடக மாநிலத்தின் மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் கேரளாவுக்கும் பூக்கள் அனுப்பமுடியாத சூழலில் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பூக்கள் விற்பனை ஆகாமல் தேங்கியது. இதனால் கிலோ ரூ.350க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று கிலோ ரூ.100க்கு கூட விற்பனையாகவில்லை.பூக்கள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.