ஈரோடு: மேட்டூர் அணை நீர் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக அணையின் பாதுகாப்புக் கருதி அணையிலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் தற்காலிக முகாம்கள், தனியார் திருமண மண்டபம், அரசுப்பள்ளி உள்ளிட்டவைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பவானி, காவிரி கரையோரப்பகுதிகளான அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட காவிரி கரையோரப்பகுதிகள், பவானி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கந்தன்பட்டறை, நேதாஜி நகர், காவேரி நகர், காவேரி வீதி, பசுவேஸ்வரர் வீதி , கீரைக்கார வீதி, தினசரி மார்க்கெட் , பழைய பாலக்கரை உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் 450 குடும்பங்களைச்சேர்ந்த மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் இன்று (ஆக.28) கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, வருவாய்த்துறையினர் சார்பில் வேண்டிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரிநீர் செல்வதால் முதல் கட்டமாக பவானி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கந்தன் பட்டறைப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால், அப்பகுதி பொதுமக்கள் நேற்று இரவு பவானி வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினால் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் மீன் பிடிக்கவோ இறங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவானது அதிகரிக்கப்படும் பட்சத்தில் பவானியில் உள்ள காவிரி கரையோரப்பகுதிகளான பசுவண்ண வீதி, கீரைக்கார வீதி, பழைய பாலம் அருகே உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: 3 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை... பொதுமக்கள் அவதி