ஈரோடு ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நேற்று (மே 13) ஈரோடு மாவட்ட சுமை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தலைமையில் ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் திரண்டு வந்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுக்களை வழங்கினர். அந்த மனுவில், 'ஈரோடு குட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களின், கூலி ஒப்பந்தம் முடிவுற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இதனால் கூலி உயர்வு கோரி சங்கம் சார்பாக போராடிய போது, கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இதுவரை எந்த ஒரு கூலி உயர்வும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூலி உயர்வு குறித்து பேச சம்பந்தபட்ட அலுவலர்கள் முன்வர வேண்டும் என சி.ஐ.டி.யு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், குட்ஸ் டிரான்ஸ்போர்ட் தரப்பில் கூலி உயர்வு குறித்து பேச முன்வரவில்லை. மாறாக தொழிலாளர்களை வேலையிலிருந்து தூக்கி விடுவோம் என மிரட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
சுமார் 50 ஆண்டுகளாக ஈரோட்டில் கூலி உயர்வு கோரிக்கை வைத்து, பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட்டு கூலி உயர்வு கொடுத்து வந்த நடைமுறையை நீக்கிவிட்டு தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
எனவே இந்த பிரச்னையில் தலையிட்டு இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு பெற்று தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்' என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குன்னூரில் ஹெலிகாப்டர் ஒத்திகை..!- துணை ஜனாதிபதி பயணத்தையொட்டி நடவடிக்கை