ஈரோடு:ஈரோடு மாவட்டத்தின் முக்கிய கோயிலாக மீனாட்சிசுந்தரனார் சாலையில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயில் திகழ்கிறது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெற்று வரும் கோயில் திருவிழா, இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயில் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இதற்கிடையில், கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏப்.10 முதல் அமல் படுத்தியுள்ளது.
அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் சனிக்கிழமை (ஏப்.10) கோயிலில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “அரசு அறிவித்துள்ள உத்தரவிற்கு பொதுமக்கள் கட்டுப்பட்டால் மட்டுமே கரோனாவை வெல்ல முடியும். வரும்முன் காப்பதே சிறந்தது” என்றார்.
மேலும், வழக்கமாக நடைபெறும் மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் கடும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதையும் எடுத்துக் கூறினார்.