ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வந்த நிலையில், சில நாள்களாக பாதிப்பு குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், தற்போது 789 பேர் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், இதுவரை கரோனா நோய்த் தொற்று பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சித்துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் நோய்ப்பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையாளர் விஜயகுமாருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சியிலுள்ள அவரது செயற்பொறியாளர் அலுவலகம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டது.
மேலும், மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநகராட்சியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.