இன்று நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ஆகியோர் மூவர்ணம் அடங்கிய பலூன்களை வானில் பறக்கவிட்டனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்தர போராட்ட தியாகிகள், மொழிப் போராட்ட தியாகிகள், அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் சிறப்பாக பணிபுரிந்த உயர் காவல்துறை அலுவலர்கள், காவலர்களுக்குப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பின்னர் அரசின் அனைத்துத் துறையிலும் சிறப்பாகப் பணிபுரிந்த அலுவலர்கள், ஊழியர்களுக்கு சிறப்பு செய்திடும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 436 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இறுதியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதேபோல் நாகையில் 71ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகளை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கௌரவித்தார்.
நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா, நாகப்பட்டினத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆட்சியர் பிரவீன் நாயர் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து 254 பயனாளிகளுக்கு 1 கோடியே 91 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக சமாதான புறாவை பறக்கவிட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
இதையும் படிங்க: இறந்தவர்களுக்கான பத்ம விருதுகள் 2020 அறிவிப்பு