ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் புட்டு சித்தா. இவர் பத்துக்கும் மேற்பட்ட பசுக்களை வளர்த்துவருகிறார். இவரது வீட்டை ஒட்டி அமைந்துள்ள மாட்டுக் கொட்டகையில் பசுக்களைக் கட்டிவைத்துள்ளார்.
நுழைந்த காட்டு யானை
இந்நிலையில் ஜனவரி 19ஆம் தேதியான இன்று அதிகாலை வனப்பகுதியிலிருந்து வெளியேறி மல்லன்குழி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை புட்டு சித்தாவின் மாட்டுக் கொட்டகைக்குள் நுழைந்தது.
காட்டு யானையைக் கண்ட மற்ற பசுக்கள் சத்தம் போடவே அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் வந்து பார்த்தபோது காட்டு யானை மாட்டுக் கொட்டகைக்குள் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பசு பலி
இதைத் தொடர்ந்து அங்கிருந்த கழிப்பறையைத் தும்பிக்கையால் இடித்துத் தள்ளியது. அத்தோடு அந்த யானை ஒரு பசுவை தும்பிக்கையால் தாக்கி காலால் மிதித்ததில் பசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
உடனடியாக அங்கிருந்த மக்கள் சத்தம் போட்டு காட்டு யானையை விரட்டி அடித்தனர். இது குறித்து ஜீரஹள்ளி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை ஊருக்குள் வந்து பசுவை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு - கே.என். நேரு