ஈரோடு: அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக பிரசாத் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் அந்தியூர், தவுட்டுப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் புதுப்பாளையம், பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு் ஆய்வுசெய்தனர்.
அப்போது வாக்குச்சாவடிக்கு தேவையான மின்சார வசதி, சாய்தள வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவை உள்ளனவா என்றும் ஆய்வு செய்தார் . மேலும் அந்தியூர் தொகுதிக்குள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அப்பகுதியில் கூடுதல் கேமராக்கள் பொருத்துதல், கூடுதல் காவல் துறையினரைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது போன்ற கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினார்.
பர்கூர் மலைப் பகுதிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு எடுத்துச் செல்வது? கத்திரி மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு எவ்வாறு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வது என்பது குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது தேர்தல் பார்வையாளருடன் அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, அந்தியூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ, ஆகியோர் உடனிருந்தனர்.