ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள கடப்பமடை பகுதியில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களிடையே மனுக்களைப் பெற்று பல்வேறு சாதனைகள் செய்த தனி நபர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குச் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் பேசிய அவர், "ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் கொள்ளையடிக்க அதிமுகவினர் திட்டமிட்டு, புதிய திட்டங்களை அறிவிக்கின்றனர். மூன்று மாதத்திற்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் தவறு செய்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தபின், வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும். தொண்டர்களிடையே வாங்கிய மனுவின் பிரச்சினைகளைத் தீர்க்க தனி அலுவலர் நியமிக்கப்படுவர்.
கருணாநிதி என்னை மகனாகப் பார்க்கவில்லை தொண்டனாகவே பார்த்தார். இப்போது நான் தலைமைத் தொண்டனாகத்தான் நினைக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டன. திமுக, மக்களிடம் புகார் வாங்குவது முதலமைச்சருக்குப் பிடிக்கவில்லை.
தேர்தல் நெருங்கிவருவதால் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்கின்ற முதலமைச்சர், கடந்த நான்கு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ன?
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு கோடி பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதா? இரண்டு தொழில்முனைவோர் மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் என்னென்ன?
அதிமுக ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடக்கின்றது. மூன்றாயிரத்து 888 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டெண்டர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும். இது உங்களுக்கு எச்சரிக்கை.
மேலும் கூவத்தூரில் முதலமைச்சரானதுபோல் கருணாநிதி ஆகவில்லை. தமிழ் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் கருணாநிதி, ஆட்சி கவிழும் எனத் தெரிந்தே ஆதரித்தவர் கருணாநிதி.
சசிகலா முதல் மோடி வரை அனைவரது பாதமும் தாங்கும் பழனிசாமிக்கு கருணாநிதி பற்றி பேசத் தகுதியில்லை. கருணை மிகுந்த திமுக ஆட்சிக்கு வரும், கவலைகள் தீரும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் பார்வையில் ஸ்டாலின் ஒரு மன நோயாளி - பொள்ளாச்சி ஜெயராமன்