திருவோண நட்சத்திரம், திங்கள்கிழமை, அமாவாசை ஆகிய மூன்றும் சேர்ந்து 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இந்த நிகழ்வு 'மகோகதயம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பு வாய்ந்தது என்ற ஐதீகம் உள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானியில் காவேரி ஆறும், பவானி ஆறும் சேரும் கூடுதுறையில் இன்று ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்தனர்.
ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களது பெற்றோர்கள், முன்னோர்கள் ஆகியோருக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். மேலும் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வழிபாடு நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் அதிக அளவில் போலீஸார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.