ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியில் நன்செய் பாசனத்திற்கு நெல் பயிரிட வினாடிக்கு 2300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது.
சில நாள்களிலேயே ஈரோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் கரை உடைப்பு ஏற்பட்டதால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
பின்னர் கரை உடைப்பு சரி செய்து ஒரு மாத காலம் கழித்து மீண்டும் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக பவானிசாகர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கீழ்பவானி பாசன பகுதியில் விவசாயிகள் குறித்த நேரத்திற்கு நெல் பயிரிட முடியாமல் காலதாமதமாக நடவு பணி மேற்கொண்டனர்.
வழக்கமாக தைப் பொங்கலுக்கு முன்னதாக நெல் அறுவடை பணிகள் முடிந்துவிடும். ஆனால் வாய்க்கால் கரை உடைப்பு காரணமாக ஒரு மாத காலம் தாமதமானதால், தற்போது பொங்கல் பண்டிகை முடிந்தும் நெற்கதிர்கள் முற்றாததால் அறுவடை பணிகள் தொடங்கவில்லை.
இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை பணிகள் தொடங்கும் என எதிர்பார்த்து ஆத்தூர், ராசிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் சத்தியமங்கலம் பகுதியில் இயந்திரங்களைக் கொண்டு வந்து தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
அறுவடை பணிகள் தாமதமாவதால் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருவதோடு, கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை பணி எப்போது தொடங்கும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் சிறுத்தையை பிடிக்க 4 நாட்களாக காத்திருக்கும் வனத்துறை