'குறைந்த நாள்களில் அதிக மகசூல்' இது வெறும் வார்த்தை அல்ல! விவசாய நிலத்தின் சாபம். பருவமழை பொய்த்துப்போதல், காலநிலை மாற்றம், விதைப் பயிர் விலை உயர்வு, விவசாயப் பொருள்களுக்கு போதிய விலையின்மை உள்ளிட்டப் பல்வேறு இடையூறுகளையும் தாண்டி நிற்கும் விவசாயி ரசாயன உரத்தினால் தோற்றுப்போகிறான்.
நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற நிலத்தில் எருக்கச் செடி விளையும் என ஒரு நிலத்தின் வளமையை தாவரங்களை வைத்து அடையாளம் கணும் விவசாயிகள். ரசாயன உரத்தைப் பயன்படுத்தினால் மண் மலடாகும் என்பதை ஏற்க மறுப்பது வியக்கத்தக்க ஒன்று.
குறைவான செலவில் அதிகமான, விரைவான விளைச்சல் என விவசாயிகள் ரசாயன உரங்களை நாடிச் சென்றதன் விளைவு ஊட்டச்சத்து குறைவான பயிர்களுக்கும், ஆரோக்கியமற்ற உணவு வகைகளுக்கும் வழிவகுத்துள்ளது. அவற்றைதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்கிறோம். அதனால் பல்வேறு நோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகிறோம்.
இந்த இரசாயன உரங்களை தவிர்க்க நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்ற வேளாண் விஞ்ஞானிகள் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் இடையே ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குப் பின் ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கே மாறிவருகின்றனர். அப்படி மாறிய ஒருவர்தான் ஈரோடு மாமரத்துப்பாளையத்தைச் சேர்ந்த சேகர்.
அவர் இயற்கை விவசாய முறையில் ஐந்து ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களான சேலம் சன்னா, கருப்புக் கவுலி, ஜீரகச் சம்பா போன்றவற்றை பயிரிட்டு வருகிறார். 135 நாள்கள் விளைச்சலில் நல்ல வருவாயை ஈட்டி வருகிறார். தற்போது அவரின் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளும், வாடிக்கையாளர்களும் அவர் பயிரிட்ட நெல் ரகங்களையே கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து அவர் கூறுகையில், "இரசாயன உரங்கள் நிலத்திற்கு விஷமாகும். அது நாளடைவில் நிலத்தைப் பாலாக்கி மலடாக்கிவிடும். குறுகிய கால வருமானத்திற்கு ஆசைப்பட்டு தாய் போன்ற நிலத்தை இழக்கும் நிலைதான் தற்போது நிலவிவருகிறது. அதனைத் தடுக்கும் விதமாக நெல் நடவிலிருந்து ஆரம்பித்துள்ளேன். விரைவில் எனது சுற்றுவட்டார விவசாயிகளும் இந்த முறைக்கு மாறுவார்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
காரணம் பாரம்பரிய முறையில் இரசாயனம் அல்லாமல் நெல் அறுவடை செய்யப்படுவதால், அந்த அரிசி ரகங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிமாக உள்ளதுதான். அதுமட்டுமல்லாமல் ரசாயனம் தெளிக்கப்படாமல் பயிரிடப்படுவதால் நாற்று நடப்படுவதால் கை, கால்களில் புண்கள் ஏற்படாமல் பணி நடைபெறுகிறது என விவசாயப் பணிப் பெண்கள் கூறுகின்றனர்.
மேலும் அவர் உரமாக மாட்டு மூத்திரம், நாட்டுச் சர்க்கரை உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசலை பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்துகிறார்.
ரசாயனம் தவிர்த்தல் மட்டுமல்லாமல் சேகர் இயற்கை விவசாய முறையான ஒற்றை நெல் நடவுப் பணியிலும் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். அவரைப்பார்த்து மற்ற விவசாயிகளும் ரசாயனமல்லாத நெல் நடவுக்கு மாறி வருகின்றனர். ஏனென்றால் இதன் மூலம் தரமான விதைநெல்லும், அரிசியும் கிடைக்கிறது. அதைத்தான் வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர்.
எப்படியோ சேகர் போன்று படிப்படியாக அனைத்து விவசாயிகளும் நெல் நடவில் மட்டுமல்லாமல் அனைத்துப் பயிரிடுதலிலும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இருந்தல் ஆரோகியத்திற்கும், தரமான நிலத்திற்கும் பக்கபலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: 'பாரம்பரிய நெல்களை அதிகளவு சாகுபடி செய்ய வேண்டும்' - ஆட்சியர் கதிரவன்