ஒரு நாட்டின் தொன்மைக்கும் வளர்ச்சிக்கும் அடையாளமாகத் திகழ்பவை கட்டடங்களும், அதன் கட்டுமானங்களும்தான். கட்டுமானத்தின் ஆணிவேராகத் திகழ்வது செங்கல். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான செங்கல்சூளைகள் உள்ளன. இந்தச் செங்கல் சூளைகளை நம்பி லட்சக்கணக்கான மக்கள் பிழைப்பு நடத்திவரும் நிலையில், நாகரிகம் வளர வளர இந்தத் தொழிலுக்கு நாளுக்கு நாள் மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அத்திகவுண்டன்புதூர், கொண்டப்பநாயக்கன்பாளையம், அங்கணகவுண்டன்புதூர், டி.ஜி.புதூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த மாதம் மழை பெய்ததால் ஒரு மாத காலம் செங்கல் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் செங்கல் உற்பத்தி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் செங்கல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செங்கல் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது செங்கல் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் ஒரு செங்கல் ரூ.4.80 முதல் ரூ.5 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும் செங்கல் தயாரிப்பதற்கு தேவையான மண் எடுக்க அரசு ஆண்டு முழுவதும் அனுமதி அளிக்க வேண்டும், செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல் தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.