ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் 7 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2018ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனச்சரகம், காராச்சிக்கொரை வன சோதனைச் சாவடி வனப்பகுதியில் 50 ஏக்கர் நிலத்தில் பழங்குடியினர் அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
இதில் பழங்குடியின மக்கள் உபயோகப்படுத்திய இசை கருவிகள், உடைகள், வாழ்வியல் பொருள்கள் உள்ளிட்டவை இடம்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் பழங்குடியினர் அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கைவிடப்பட்டு முழுமை பெறாமல் உள்ளன.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பழங்குடியினர் அருங்காட்சியகம் இன்றும் பயன்பாட்டிற்கு வரவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தின் இணை இயக்குநர் கிருபா சங்கரிடம் கேட்டபோது, "நிதி பற்றாக்குறையால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பழங்குடியினர் அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை.
அரசின் கூடுதல் நிதி வந்தவுடன் பணிகள் நிறைவு பெற்று, ஒரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பிரதமர் அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி