ஈரோடு : ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் பகுதியில் லாரி கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டாக்டர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுக்கி இறந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர், உடையானூர் பகுதியில் வசிக்கும் தேவநாதன் (52) தனியார் நிறுவன மேனேஜர். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வகையில் வோள்ஸ் வேகன் காரில் தனது மனைவி இந்திராணி (50) (வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர்) உறவினர் மேட்டூர், மேச்சேரி சுப்பிரமணியன் நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் (33) ஆகிய மூவரும் கோவையில் இருந்து பவானி வழியாக மேச்சேரி சென்று கொண்டிருந்துள்ளனர்.
தேவநாதன் ஓட்டி வந்த கார் பவானி அருகிலுள்ள சித்தார், காடப்பநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மேட்டூரில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி அதிவேகமாக வந்து காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதனைத் தொடர்ந்து பவானி காவலர்கள், தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று காரில் இடிபாடுகளில் இறந்து கிடந்த மூன்று பேரின் உடல்கள் மீட்டு உடற்கூராய்வு பரிசோதனை செய்ய பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடிய நிலையில், அவரை பவானி போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : டிப்பர் லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து