கோவை சாய்பாபா காலனி - மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை அங்கிருந்த மேலாளர் காணொலியாகப் பதிவு செய்துள்ளார். இதை அறிந்த ஊழியர் ஒருவரின் கணவர், மணிகண்டன் காவல் துறையில் புகார் மனு அளித்திருந்தார்.
மேலும் இது குறித்து கேள்வி எழுப்பியதற்காக தன்னை நிர்வாகத்தினர் அடித்ததாகவும் கூறி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து அந்த காணொலியானது தனியார் யூடியூப் சேனலில் சென்சார் செய்யாமல் பதிவிடப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பின்பு சமூக வலைதளங்களிலிருந்து அந்தப் பதிவானது நீக்கப்பட்டது. இந்த காணொலியை பதிவு செய்த சுபாஷ், யூடியூப் சேனலில் பதிவிட்ட மருதாசலம், இதற்கு துணையாக இருந்த மணிகண்டன், ஆகியோரை கடந்த வாரம் சாய்பாபா காலனி காவல் துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டதை அடுத்து இன்று மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதற்கான நகலையும் கோவை மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:
'பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்தவேண்டும்' - மு.க. ஸ்டாலின்