பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளைக் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆனைமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சிறுமிகள் கடந்த சில மாதங்களாக தனியார் காயர் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததும், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த பெத்தநாயக்கனூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சிறுமிகளிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு ஆனைமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
போக்சோ சட்டத்தில் கைது
இதையடுத்து அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இளைஞர்கள் இரண்டு சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்புணர்வு செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து மகளிர் காவல் துறையினர் இளைஞர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர்.