கோயம்புத்தூர்: தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இன்று (அக்.19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “மலையக தமிழர்கள் இன்னமும் இலங்கை குடியுரிமையும், இந்திய குடியுரிமையும் இல்லாமல் இருக்கின்றனர். மலையக தமிழர்களுக்காக குரல் கூட கொடுக்காதவர் முத்தையா முரளிதரன். இப்போது மலையக தமிழர் என்று அவர் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்.
முத்தையா முரளிதரன் சன்ரைசர்ஸ் என்ற ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. லைக்கா என்ற சினிமா நிறுவனத்தை இப்போதும் நாங்கள் எதிர்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மருத்துவ படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 7 தமிழர்கள் விடுதலைக்கான விவகாரத்திலும் ஆளுநர் இன்னும் பதிலதரவில்லை” என்றும் கு.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்திற்கு ஆளுநர் ஓப்புதல் வழங்கக் கோரி அக்டோபர் 23ஆம் தேதி, சென்னையில் ஆளுநர் மாளிகையினை தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கின்றோம் என்று கு.ராமகிருஷ்ணன் அறிவித்தார்.