கோவை மாவட்டம் வால்பாறை செல்ல கரோனா தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வால்பாறை வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ், பொது செயலாளர் ஷாஜி ஜார்ஜ் மாலிக்கல், பொருளாளர் ஜேசுதாஸ் ஆகியோர் நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரிடம் சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
இதனையடுத்து கடந்த 9 மாத காலமாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் தலநார், நல்லமுடி, பூஞ்சோலை, சின்னக்கல்லார் போன்ற பகுதிகளை காண சுற்றுலா பயணிகள் விரைவில் அனுமதிக்கப்படுவர் எனவும் முதல் கட்டமாக அட்டகட்டியில் உள்ள வருவாய்த்துறை சோதனை சாவடி அகற்றப்பட உள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் இன்றி பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வால்பாறை வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.