தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் வரவேற்ற தமிழர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அங்குள்ள தமிழ் மக்கள் என்னை அன்போடு வரவேற்றார்கள். நிறைய முதலீடுகளையும், சிறந்த திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து வந்துள்ளேன். அதனை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 26 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால், அதிமுக ஆட்சியில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 53 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிமுக செய்துவரும் வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தை முன்னேற்றி வருகிறார்கள்.
இது ஸ்டாலினுக்கும் தெரியும். ஆனால் அவர் பாராட்ட மாட்டார், ஏனென்றால் அவர் குறுகிய எண்ணம் படைத்தவர். கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை குறுகிய காலத்தில் செயல்படுத்தி வருகிறோம். ஆனால், திட்டமிட்டு தவறான செய்திகளை ஸ்டாலின் பரப்பி வருகிறார். மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் தடுக்கப்படும். மத்திய அரசின் சட்டத்தை மறுபரிசீலனை செய்து முறையாக அமல்படுத்தப்படும்”, என்றார்.