சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்துவருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகளை வனத் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
எனினும் காப்புக்காடுகளில் தண்ணீர்த் தொட்டிகளை அதிகரிக்க வேண்டும் எனவும், சிறிய நீர்நிலைகளில் நீரை நிரப்ப வேண்டும் என வன விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வனம், காப்புக்காடுகளில் வாழும் உயிரினங்களுக்குத் தேவையான நீர் கிடைத்தது.
எனினும் மார்ச் மாதம் முதல் கோடைகாலம் தொடங்கியுள்ளதால், காடுகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால் மான், யானை உள்ளிட்ட வன உயிரினங்கள், காட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஐந்து தேசிய பூங்காக்களும், 15 பறவை மற்றும் வனவிலங்கு சரணாலயங்களும், நான்கு புலிகள் காப்பகங்களும் உள்ளன. கோடைகாலங்களில் உயிரினங்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செயற்கை முறையில் தொட்டிகள் மூலம் நீர் நிரப்பப்படும்.
மேலும், தண்ணீர் லாரிகள் மூலமும் வனத்தில் உள்ள சிறு குட்டைகளில் நீர் நிரப்பப்படும். குறிப்பிட்ட வனப்பகுதிகளில் நீர் நிரப்பும் பணிகளை வனத் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து பேசிய சுற்றுச்சூழல் அறிவியல் உதவி பேராசிரியர் மற்றும் வன விலங்கு ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி, "நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் உயர்ந்துவருகிறது. இது வனவிலங்குகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
அதிக வன விலங்குகள் உள்ள காப்புக்காட்டில், வற்றாத நீர்நிலைத் திட்டம் மூலம் நீர்த் தொட்டிகளை வைப்பார்கள். இதனைச் சிறிய வனப்பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே கோவை வனப்பகுதியின் முக்கிய இடங்களில் தண்ணீர்த் தொட்டி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நீர் நிரப்பும் பணி நடைபெற்றுவருவதாகவும் அம்மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
சில பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு அதன்மூலம் நீர் உறிஞ்சப்பட்டு குட்டைகளில் நிரப்பப்படுவதாக அவர் கூறினார். சில நாள்களுக்கு முன், தண்ணீர் இல்லாமல் யானை இறந்துவிட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் அவர் மறுப்புத் தெரிவித்தார்.
நீலகிரி வனச்சரக காடுகளில் குளம், குட்டைகளில் போதிய நீர் உள்ளதாக அம்மாவட்ட வனக்கோட்ட உதவி காப்பாளர் சரவணகுமார் தெரிவித்துள்ளார். தண்ணீர் இல்லாத சில இடங்களில் தண்ணீர் நிரப்ப உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தில், தண்ணீர்த் தொட்டிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகவும், இதன்மூலம் யானைகள் தாகம் தீர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.