கோவை பீளமேடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் துறையினர் ஜூன் 15ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, வீரியம்பாளையம் சாலையிலுள்ள காலி மைதானத்தில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்துள்ளார். அவர்கள் இருவரையும் அழைத்து காவல் துறையினர் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
கஞ்சா விற்பனை
அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வினோதினி (21), சூர்யபிரசாத் (21) எனத் தெரியவந்தது. சூரிய பிரசாத் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்ததும், வினோதினி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து கொண்டு காதலன் சூரிய பிரசாத்துக்கு உதவிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
2.25 கிலோ கஞ்சா பறிமுதல்
இருவரும் பீளமேடு நேரு நகர்ப்பகுதியில் வீடு எடுத்து தனியாக வசித்துக்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், இருவரும் ஜோடியாக சென்றால் காவல் துறையினர் சந்தேகப்பட மாட்டார்கள் என்றும், செவிலியர் எனக்கூறி ஊரடங்கு நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்று திட்டமிட்டு கஞ்சா விற்பனை செய்துவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 2.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.