பொள்ளாச்சி நகரத்துக்குட்பட்ட 36 வார்டுகளில் குப்பை மலைபோல் தேங்கி இருக்கிறது, நகரம் முழுவதும் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படவில்லை தெருவிளக்குகள் எரிவதில்லை குடிநீர் சரிவர வருவதில்லை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பாதாளச் சாக்கடை பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்பன குறித்து திமுகவினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
மேலும், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை சார் ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் திமுக சார்பில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே நகராட்சியின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து 19ஆவது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமன் வீதி நடுநிலைப்பள்ளி அருகில் பல மாதங்களாகச் சுத்தம் செய்யப்படாமல் இருந்த குப்பையை மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் அகற்றினர்.
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பையை அள்ளி அப்புறப்படுத்தும்வரை இந்த நூதன போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர். இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.