கோயம்புத்தூர்: பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தான் உணவு உண்ட உணவகம் குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ``உணவகம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். உண்டு முடித்துவிட்டு பணம் செலுத்தச் சென்றேன். ஆனால், கணக்காளர் என்னிடம் பணம் வாங்க மறுத்துவிட்டார். அழுத்தமாக சொன்ன பிறகு தயக்கத்துடன் பணம் பெற்றுக் கொண்டார். நான் அவரிடம் சொன்னேன், நாங்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். அனைவரையும் மதிப்பவர்கள். நாங்கள் திமுகவைப் போல் நடந்து கொள்ள மாட்டோம்" என பதிவிட்டிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பதிலளித்துள்ள ஹோட்டல் தரப்பு, தங்களின் ட்விட்டர் பக்கத்தில், "மதிப்புக்குரிய தேஜஸ்வி சூர்யா அவர்களே, எங்கள் உணவகத்தில் உங்களை உபசரித்தது குறித்து மகிழ்கிறோம். அன்னபூர்ணாவில் அனைவரையும் ஒரே விதமான அன்பு மற்றும் நன்றியோடும் அணுகுகிறோம். அனைவரும் பணம் செலுத்தவே விரும்புகின்றனர். யாரும் எங்களை இலவசமாக கொடுக்கும்படி வற்புறுத்துவதில்லை. மக்களுக்காக உழைப்பவர்களுக்கு அன்பும் மரியாதையும் செலுத்தும் விதமாக நாங்கள் சில நேரங்களில் பணம் பெறுவதில்லை." என்று தெரிவித்துள்ளது.