கோயம்புத்தூர்: தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் 104 கோடி தடுப்பூசி செலுத்தியதால், உலக நாடுகள் நம்மை பாராட்டுகின்றன. ஆனால் நம் நாட்டில் மட்டும் சிலர் விமர்சனம் செய்கின்றனர்.
கரோனா இரண்டாவது அலையின் போது புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்ஸிஜனில் 30 சதவீதத்தை தமிழ்நாட்டிற்கு அளித்தோம். புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 40 சதவீதம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். நாங்கள் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் சேவையாற்றினோம்.
சீனாவில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. அதனால், பொதுமக்கள் கரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். நவம்பர் மாதம் 11 ஆம் தேதி டெல்லியின் ஆளுநர்கள் மாநாடு நடக்கிறது. அதில் எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்ற தகவலை அளிக்கும்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நானும் தெலுங்கானா, புதுச்சேரி அரசுகளிடம் தகவலை கேட்டுள்ளேன். இரு மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். தமிழ்நாடு கவர்னரும் இதற்காகத் தான் தகவல் கேட்டிருப்பார். இங்கு இது சர்ச்சையாகியுள்ளது.
தமிழ்நாட்டில் எல்லாமே அரசியலாக்கப்படுகின்றது. மாநிலத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தகவல்களை சேகரித்து கலந்துரையாட இருக்கின்றோம். கவர்னர் என்பதால் யாருக்கும் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றது. அங்கு நடந்த சில சம்பவங்கள் குறித்து டிஜிபியிடம் அறிக்கை கேட்டுள்ளேன். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் சமூக நீதியுடன், பாதுகாப்புடன் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு - மீண்டும் ஊரடங்கு