கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில், மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தரத் துப்புரவுப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர், எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்துப் பேசினார்.
அப்போது, கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு, நாளை முதல் வழங்கப்படும் என்றும், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் இது தொடர்பாக விண்ணப்பிக்கலாம் அல்லது இணையதளம் மூலமாக விண்ணப்பித்தால் பிரச்னை இல்லாமல் எளிதாகக் கிடைக்கும் எனவும் கூறினார்.
மேலும், குடிநீர் இணைப்பிற்காகச் சாலைகளைச் சேதப்படுத்தினால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த அவர், சூயஸ் குடிநீர் திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது எனவும், எதிர்க்கட்சி கொண்டு வந்தாலும் நல்ல திட்டம் என்பதால் இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
சூயஸ் திட்டம் தொடர்பாக பல்வேறு புரளிகளைப் பரப்பி வருகின்றனர் என்ற அமைச்சர், சூயஸ் நிறுவனத்திற்குக் குடிநீரின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் கிடையாது எனவும், குடிநீர் விநியோக உரிமம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.