கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில் , ரஜினி மக்கள் மன்றம், அதிமுக போன்ற பிற கட்சிகளில் இருந்து விலகிய, 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவர்கள் அனைவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தங்களை முறைப்படி திமுகவில் இணைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், "இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளது. திமுக தன் மக்களையும் நாட்டையும் காப்பாற்றும்; குறிப்பாக ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு உள்ளது.
திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு துணையாக இருக்கும். அதிமுக அரசுக்கு கமிஷன், கரப்ஷன் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. அப்படிப்பட்ட ஆட்சியை தூக்கி எறிவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
டெல்லியில், கடுமையான குளிரிலும் மழையிலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரிக்கை வைத்து, 60 நாட்களாக போராடி வருகின்றனர். பல பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மூன்று வேளாண் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்த போது எதிர்ப்பு திமுக தெரிவித்தது; அதிமுக ஆதரித்தது. அவர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. போராடுகிற விவசாயிகள் டிராக்டர் ஊர்வலமாக டெல்லியில் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். காவல்துறை, அரசு முறையாக அனுமதி தந்தது. ஆனால் மத்திய அரசு, காவல்துறையை தவறாக பயன்படுத்தி காட்டும் காட்டுமிராண்டித்தனமாக அடித்துள்ளது, கோரமான விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். விவசாயி இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இப்படி ஒரு கொடுமை நடப்பதற்கு காரணம் இப்போதுள்ள அதிமுக அரசு தான். இந்த சட்டம் வராமல் இருந்தால் இந்த பிரச்னை இருந்திருக்காது. இதற்கு காரணம் அதிமுக அப்படிப்பட்ட இந்த அரசுக்கு புத்தி புகட்டுவதற்கு மூன்று மாத காலம் அவகாசம் உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விவசாயிகளை அழைத்து பேச வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை எனத் தெரிவித்தார்.
முன்னதாக பத்மஸ்ரீ விருது பெற்ற மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பா மாளை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், அவருக்கு சால்வை அணிவித்து, கருணாநிதியின் உருவ சிலையை பரிசாக வழங்கினார்.
இதையும் படிங்க: இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்தான் விவசாயத்தை காக்க முடியும்- பத்மஸ்ரீ பாப்பம்மாள்