கோயம்புத்தூர்: குடும்ப தகராறு, கடன் பிரச்னை, தேர்வுகளில் தோல்வி என ஒவ்வொரு சிறு சிறு காரணங்களால் தற்கொலை எண்ணம் தோன்றுவதால் ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு அல்ல என பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் சின்ன சின்ன காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்வது என்பது தற்போது அதிகரித்து வருகிறது.
இளம் வயதினரிடையே இந்த எண்ணம் அதிகளவு தோன்றுவதால் சிறுசிறு காரணங்களுக்காக பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுபோன்ற செயல்களைத் தடுக்க கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு, தற்கொலை எண்ணம் தோன்றுபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வண்ணம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரச்னைகளால் ஏற்படும் விபரீதம்
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறுகையில், “கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் ஒவ்வொரு வருடமும் அந்தந்த காவல் நிலையங்களில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ததில் கடந்த 5 வருடங்களில் 650 பேர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.
மேலும், கடந்த இரண்டு வருடங்களில் கரோனா காலகட்டத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில் குடும்ப பிரச்னை, வருமானமின்மை, உடல்நல பிரச்னை காரணங்களாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவை 75 விழுக்காடு தற்கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த காரணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது தற்கொலை எண்ணம் வரக்கூடிய நேரத்தில் அவர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல ஆள்கள் இல்லாததே தற்கொலைக்குக் காரணமாக அமைகிறது.
மன நல ஆலோசனை வழங்கும் காவலர்கள்
இதனையடுத்து தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் காவலர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு, தொலைபேசியில் பேசுபவர்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகள் வழங்குவது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் மனோதத்துவ நிபுணர்களிடமும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிப் பெற்ற காவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர்களுடைய பிரச்னை குறித்து ஆலோசனை வழங்கப்படும். அதனடிப்படையில் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவலர்கள் ஆலோசனை வழங்குவார்கள். அதன் மூலம் தற்கொலை எண்ணம் வராத வகையில் அவர்களை மாற்ற முடியும், தற்கொலை எண்ணம் வந்தால் உடனடியாக காவல் துறையை அணுகி ஆலோசனைப் பெற்றுக் கொள்ளலாம். இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்வதால் நாட்டுக்கும் இழப்பு ஏற்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மனதை சுத்தப்படுத்தினால் தற்கொலை எண்ணம் தோன்றாது
இது குறித்து மனநல ஆலோசகர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தற்போது அதிகளவில் கரோனா காரணமாக மன பயம் வருகிறது. இதில் தெளிந்த பயம், கற்பனை பயம் என இருவேறு பயங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு எதிர்மறை எண்ணங்கள் அவர்களுக்குத் தோன்றுகிறது. பயம், மன அழுத்தம் காரணமாகவே அவர்களுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. இந்த எண்ணம் ஒரேநாளில் வருவதில்லை மெதுவாக தான் இந்த எண்ணம் தோன்றுகிறது.
இதனை சரிசெய்ய அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான தீர்வு ஒவ்வொரு நாளும் தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்வது போல் மனதையும் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். மனதை வளப்படுத்தும் வகையில் மனப் பயிற்சியே எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரிடமும் நன்கு பேசி பழக வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் இந்த எண்ணம் தோன்றாது.
தற்போதுள்ள சூழலில் அனைவரும் செல்போனிலேயே தங்களுடைய கவனத்தை செலுத்திக் கொள்வதால் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதில்லை. எனவே மன அழுத்தம் ஏற்படும்போது ஆறுதல் சொல்லக்கூட ஆள்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட எண்ணம் தோன்றும்போது மனோதத்துவ மருத்துவர்களை அணுகிக் கொண்டால், அதற்குத் தீர்வு கிடைக்கும். மன நல ஆலோசனைக்குச் சென்றால் தங்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி விடுவார்கள் என எண்ணுகின்றனர். அவ்வாறு இல்லாமல் மன அழுத்தம் ஏற்படும்போது ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்
சரியாக தூக்கம் வராது, உணவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என பல்வேறு வழிகளில் மனம் சார்ந்த உடல் நோய்கள் வரும்; இந்த அறிகுறிகள் வரும்போது மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றால் இதற்குத் தீர்வு கிடைக்கும். இதேபோன்று ஏராளமானோர் எங்களிடம் ஆலோசனை பெற்றுள்ளனர். கரோனா காலத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இளம் வயதினருக்கு அதிகளவில் தற்கொலை எண்ணம் தோன்றுகிறது” என்றார்.
இதையும் படிங்க: பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை