கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து நோயாளிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் மருத்துவமனையில் உணவகம் இல்லை என்று கூறி வந்த நிலையில், தனியார் உணவகம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த உணவகம் நவீன கழிப்பிடம் அருகே தொடங்கப்பட்டது.
அந்த கழிப்பிடம் சுகாதாரமற்று இயங்கி வரும் நிலையில், தற்போது தொடங்கப்பட்ட உணவகத்தில் தயார் செய்யப்படும் சிற்றுண்டிகள், தேநீர், பால் போன்ற பொருட்கள் பாதிக்கப்படும் என்று வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான ரஹ்மான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய ரஹ்மான், சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் இந்த உணவுப் பொருட்களை மக்கள் உண்டால் நோய்கள் தான் வரும் என்றும், கழிப்பிடம் அருகாமலேயே உணவகம் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை என்றும் கூறினார். மேலும், இதற்கு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.