நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் தமிழ்நாடு முழுவதும் நீரோடைகள், ஆறுகளில் மணல் எடுக்க நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மேலும் அரசு நடத்திவந்த மணல் குவாரிகளும் மூடப்பட்டன. இதற்கு மாற்றாக எம் சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. எனினும் சட்டவிரோதமாக ஆறுகளில் மணல் எடுப்பது தொடர்கிறது. மாட்டு வண்டிகள், கழுதைகள் மூலம் ஆறுகளில் மணல் திருடப்பட்டுவந்தது. இரவு நேரங்களில் யாரும் இல்லாத சூழலில் மட்டும் இந்தச் செயல்கள் நடைபெற்றுவருகின்றன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான கழுதைகள் மூலம் ஆற்று மணல் திருடப்பட்டுவருகிறது.
இதனை காவல் துறையோ, வருவாய்த் துறையோ கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆற்றின் நடுவே நூற்றுக்கணக்கான கழுதைகளில் மணல் மூட்டைகள் ஏற்றப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு இதனைத் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே பவானி ஆற்றில் உள்ள பாறை இடுக்குகளில் சிக்கி பலர் உயிரிழந்துவரும் நிலையில் மணல் அதிகமாக எடுப்பதால் அப்பகுதிகளில் திடீர் பள்ளங்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், “மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களைப் பிடிக்க முயன்றால் அவர்கள் தப்பி ஓடிவிடுகின்றனர். கழுதைகளைப் பறிமுதல்செய்து அலுவலகத்திற்கு கொண்டுசென்றால் அவற்றைப் பராமரிக்க முடிவதில்லை. மேலும் கழுதையைத் திரும்பப் பெற யாரும் முன்வராத சூழலில் அதனைப் பராமரிப்பது என்பது கடினமான செயல்.
மணல் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் கழுதைகளைப் பிடித்து வேறு இடங்களில் விட்டால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க முடியும். அதற்கு அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூரப்பா மீதான விசாரணைக் குழுவிற்கு காலநீட்டிப்பு கேட்கத் திட்டம்