கோயம்புத்தூர்: நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தென்னக ரயில்வே மேலாளர், டிவிசன் மேலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
இக்கடிதத்தில், "நாடு முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. ஆக்ஸிஜன், தடுப்பூசி ஆகியவற்றின் பற்றாக்குறை முழுமையாக தீர்க்கப்படவில்லை. இதன் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று சங்கிலியை உடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
ஊரடங்கினால் ரயில்வே சேவைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ உள்ளிட்ட பயண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறையும், 50 விழுக்காட்டினர் பணிக்கு வந்தால் போதும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தென்னக ரயில்வேயில் அரசு அலுவலகங்களில் ஷெட், ஷாப்களிலும் 50 விழுக்காடு தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய முறையில் பணியாற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டுகிறேன். மேலும் ரயில்வே மருத்துவமனைகளில் தேவையான ஆக்ஸிஜன் மருந்துகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுகிறேன்.
ரயில்வே துறையில் உள்ள இஞ்சினியரிங், டிராபிக், எலக்ட்ரிக்கல் ஏசி/ டிஎல், சிக்னல், கேரேஜ் வேகன் மெக்கானிக்கல், டிஆர்டி, ஓட்டுநர் கார்டு போன்ற ஊழியர்கள் ஓடும் பாதையின் ஓப்பன் லைனில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சங்கிலித் தொடர் போல பிரியாமல் கூட்டமாக பணி செய்து வருகிறார்கள்.
சென்ற கரோனா காலங்களில் இஞ்சினியரிங் பகுதியில் உள்ள ஊழியர்கள் இடைவெளி இல்லாமல் கூட்டமாகவும், பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலும் கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இச்சூழலில் தற்போது தீவிரமாக கரோனா இரண்டாவது அலையில் ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு இதுவரை கரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் தேவைக்கேற்ப வழங்கப்படவில்லை என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது.
மேலும் சுழற்சி முறையில் பணி செய்வது உள்பட எந்தத் திட்டங்களும் இதுவரை நடைபெறவில்லை என்பதும் தெரிய வருகிறது. சென்ற ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தின் போது 700க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மரணமடைந்துள்ளனர். இப்போதும் இத்தகைய சூழல் நிலவுவது கவலையை ஏற்படுத்துகிறது.
உடனடியாக தென்னக ரயில்வே மேலாளர் ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு கரோனா பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும். ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட, பொதுப் போக்குவரத்துகள் முற்றாக முடங்கிப் போனதால் வெளியிலிருந்து வருபவர்கள் உள்பட 50 விழுக்காடு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும்.
சமூக இடைவெளியுடன், கூட்டம் சேராமல் பணிகள் வழங்க வேண்டும். கரோனா பாதுகாப்பு சாதனங்கள், கவச உடைகள், வெப்ப பரிசோதனைகள் நடைபெற வேண்டும். கரோனா தொற்றுள்ளவருக்கு சிறப்பு விடுப்பு, ஓய்வு வழங்க வேண்டும். பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மீண்டும் ஒர்க்மேன் ஸ்பெஷல் வண்டிகள் அனைத்து டிவிசன்களிலும் இயக்கப்பட வேண்டும்.
ரயில்வேயில் கரோனா பாதுகாப்பு உத்தரவுகள் அமலாவதைக் கண்காணிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் 12 முதல் 15 வயதினருக்கும் தடுப்பூசி!