கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் "வெற்றி கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்" என்ற தலைப்பில் பாஐகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது; வணக்கம் தமிழகம், வணக்கம் கோவை, வெற்றிவேல் வீரவேல், கொங்கு மண் மிக சிறந்த மண், பல அறிஞர்களை உருவாக்கிய மண். இந்த ஆண்டு தமிழ்நாடு புதிய அரசை தேர்ந்தெடுக்க உள்ளது, வளர்ச்சிக்கு எதிரானவர்களை தள்ளி வைக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், தமிழ்நாடு அரசும் கூட்டாட்சி தத்துவத்தில் செயல்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறு வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக உள்ளது. மேலும் குறு, சிறு , நடுத்தர தொழில்துறை முன்னேற்றத்திற்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
கரோனாவுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட அவசர கால கடனுதவி திட்டம் மூலம் தமிழ்நாட்டில் மூன்றரை லட்சம் தொழில்களுக்கு 14 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் மட்டும் 24 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் அதன் மூலம் பயன் பெற்றுள்ளன. சென்ற ஆண்டு சிறு குறு நடுத்தர தொழில்களுக்காக வரையறை மாற்றியமைக்கப்பட்டன. அதற்காக சாம்பியன் என்ற இணைய தளம் நிறுவப்பட்டு சிறு, குறு நிறுவனங்களின் வழக்குகள் தீர்க்கப்பட்டு, எஃகு பொருட்களுக்கு கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஜவுளி துறையை கட்டமைப்பதில் கவனம் செலுத்தி கடந்த ஏழு ஆண்டுகளில் கடன் வழங்குவதை அதிகப்படுத்தி 11 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அடுத்த மூன்றாண்டுகளில் நாட்டில் ஏழு ஜவுளி பூங்கா உருவாக்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூலம் நாடு பெருமை படுகிறது. தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான தேவைகள் நிறைவேற்றப்படுள்ளன குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பதில் கடந்த காங்கிரஸ் ஆட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடவடிக்கை எடுத்து வருகிறது
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 14 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன , கிராமப்புற வீடுகட்டும் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் மட்டும்12 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. உலகின் தொன்மையான மொழி தமிழ், தமிழர்களின் விழாக்கள் உலக புகழ் பெற்றது. தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ படிப்புகளை பிராந்திய மொழிகளில் படிக்க பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பமாக எப்படி கொள்ளையடிப்பது என சிந்தித்து வருகின்றனர். ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகம் கட்டவிழ்த்து பட்டது. அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு பெண்கள் தான் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுகவினர் எப்படி நடத்தினார்கள் என அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவை தாக்கியவர்களுக்கு காங்கிரஸ், திமுக அரசு பல பதவிகளை தந்தது. திமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டு பிரச்னையை யாராலும் மறக்க முடியாது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கை கருணையுடன் கூடிய ஆட்சியை அமைப்பதே, உலக புகழ் பெற்ற ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களால் அதிகம் பயன் பெற்றது ஏழை எளிய மக்களே ஆவர். பிராந்திய கட்சி என்ற அடையாளத்தையே திமுக இழந்து விட்டது. முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே அந்த கட்சி இழந்து விட்டது. தற்போது திமுக, காங்கிரஸ் கட்சிகள் உட்கட்சி பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறது. அவர்களால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது,
தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் நலனுக்கான ஆட்சியை தருகிறது.
தமிழ்நாடு மக்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் பல திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. திமுக ,காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் நிறைவேற்றாத தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை பாஜக அதிமுக கூட்டணியிலான அரசு நிறைவேற்றியது. அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து தேசத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வதே தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கை என கூறினார்.