கோவையை அடுத்துள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கவிக்குமார். இவர் “மை” என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்றினை நடத்திவருகிறார். இவர் கையடக்க வடிவிலான புற ஊதா கதிர் கிருமி நாசினியை தயாரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக் கவசம், கிருமிநாசினிகளின் பயன்பாடு அதிகரித்துவருகிறது. கை கழுவது, கைகளில் கிருமிநாசினி உபயோப்படுத்துவதைவிட 99.9 விழுக்காடு கிருமிகளை அழிக்கும் கையடக்க புற ஊதா கிருமி நாசினியை முற்றிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக தனது நிறுவனம் தயாரித்துள்ளது.
இதனை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களான கைப்பேசி, திறவுகோல், எழுதுகோல் (பேனா), ரிமோட், மடிக்கணினி, கதவுகளின் கைப்பிடி மட்டுமல்லாது உணவுப் பொருள்களின் மீதும் பயன்படுத்தி கிருமிகளை அழிக்க முடியும்.
மேலும், புற ஊதா கதிர்கள் மனித உடல்களைப் பாதிக்காத வகையில் உணர்வி (சென்சார்) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே இந்தக் கருவி தயார்செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஏறத்தாழ 2,000 கருவிகள் விற்பனையாகி உள்ளன. ஏழு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. 14 நாடுகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறோம்.
இந்தக் கருவியை தமிழ்நாடு அரசு, புதுச்சேரி அரசுகளுக்கு உபயோகப்படுத்துவது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவருக்கும் இந்தக் கையடக்கப் புற ஊதா கிருமிநாசினி பயன்படும் தற்பொழுது ஆலோசனைகள் நடத்தப்பட்ட வருகின்றன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : கோவையில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்