கோயம்புத்தூர்: கொடிசியா அரங்கில் 6 ஆவது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 22 ஆம் தேதி தொடங்கியது. கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து 10 நாட்கள் நடத்திய இந்த புத்தகத் திருவிழாவில் காலை 10 மணி முதல் 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் 2 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டன. மொத்தம் 280 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 150 பதிப்பாளர்கள் கலந்து கொண்டு கண்காட்சியில் 10 முதல் 15 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்பனை செய்தனர்.
வரலாற்று புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல்வேறு வகையிலான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. அதேபோல மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்களும் அதிகளவில் இடம் பெற்றுது. பல்வேறு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரபலமான நூல்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டது.
10 நாட்கள் நடைபெற்ற கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியுடன் முடிவடைந்தது. இதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றதாகவும் 3 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையானதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த கண்காட்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாற்று புத்தகங்கள் விற்பனையானதாக பதிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிந்தனை விருந்தகத்தின் உரிமையாளர் சரவணன் தங்கப்பா கூறுகையில், கரோனா தாக்கத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புத்தக கண்காட்சி நடைபெறுவதால் பெரிய வரவேற்பு கிடைத்தது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து வாசகர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இந்த ஆண்டு வரலாற்று புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையானது. குறிப்பாக பொன்னியின் செல்வன் புத்தகத்தை அதிகமாக வாங்கிச் சென்றனர். மக்கள் வரலாற்றை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
வழக்கமாக நாவல்கள் கதைகள் விற்பனையாகும். ஆனால் தற்போது வரலாற்று புத்தகங்கள் விற்பனையாவதால் தமிழர்களின் வலராற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வாங்கலாம், சோழ மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுவது போல் உள்ளது என தெரிவித்தார்.
தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் இந்த புத்தகத்தை வாங்கி சென்றனர். அது போல் சரித்திர நாவல்களும் விற்பனையானது.
அதற்கு காட்டிய முக்கியத்துவம் வேறு புத்தகங்களுக்கு இல்லை, அதுபோல் சு.வெங்கடேஷன் எழுத்திய வேல்பாரி புத்தகங்களும் அதிகளவில் விற்பனையானதாக, மீனாட்சி புத்தக உரிமையாளர் அருணாச்சலம் தெரிவித்தார்.
இது குறித்து வாசகர்கள் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புத்தக கண்காட்சி நடைபெற்றதால் ஆவலுடன் நிறைய புத்தகங்கள் வாங்கியுள்ளோம். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரவுள்ள நிலையில் வரலாறு குறித்து அறிந்து கொள்ள பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி செல்கிறோம். வரலாற்று புத்தகங்கள் படிப்பதன் மூலம் தமிழர்களின் வீரம், கலைகள் குறிந்து அறிந்துகொள்ள முடியும். இது போன்ற புத்தக கண்காட்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் பயன்பாட்டுக்கு வரவிருந்த மல்டி லெவல் காா் பாா்க்கிங் திறப்பு தள்ளிபோக காரணம் என்ன?