கோவை : இலங்கையில் நிழல் உலக தாதாவாக கருதப்பட்ட அங்கொடா லொக்கா கோவையில் உள்ள சேரன் மாநகர் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில் காதலி அம்மானி தான்ஜியுடன் 2018ஆம் ஆண்டு முதல் ரகசியமாக வசித்து வந்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலையில் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ்கள் கொடுத்து அவரது சடலம் பெறப்பட்டு மதுரையில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அங்கொடா லொக்கா, இந்தியாவில் வசிக்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை, கோவை சிபிசிஐடியினர் தேடி வந்தனர்.
அவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் டிஎஸ்பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் அங்கு விரைந்து.

இதனையடுத்து, பெங்களூரு குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த இலங்கை அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா, பெங்களூருவைச் சேர்ந்த கோபாலகிருஷணன் ஆகியோரை கைது செய்து சிஜேஎம் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் இல்லத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.
அவர்களை விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று இருவரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மனுவை விசாரித்த கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இருவரையும் 5 நாள்கள் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு அனுமதி அளித்துள்ளது. மீண்டும் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.11.14 கோடி மதிப்பில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டம் தொடக்கம்