குன்னூர் பகுதியில் அதிகாலை வேளையில் பெய்த கன மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் குன்னூரில் உள்ள ஆற்றில் அதிக வெள்ளம் செல்வதால் கரையோரத்தில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பு கருதி தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குன்னூர் எம். ஜி.ஆர். நகர் பகுதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் அங்கு வசிக்கக்கூடிய மக்கள் டிடிகே ரோடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. வெஸ்லி தேவாலய மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 32 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வருவாய் துறையினர் சார்பில் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து தேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விடுமுறை.!