கோயம்புத்தூர்: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலிலுள்ளபோது இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, கோவையிலுள்ள முக்கிய கோயில்களில் தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட வாய்ப்புள்ளது.
இதனால், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மருதமலை சுப்ரமணிய சுமாமி கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம், ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்குத் தடை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பொதுமக்களை எச்சரித்த காவல் துறை
இருப்பினும் இன்று (அக்.06) தர்ப்பணம் செய்ய பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறையில் அதிகளவு மக்கள் குவிந்தனர். இதனையடுத்து அங்கு வந்த பேரூர் வட்டாட்சியர் ரமேஷ், காவல் துறையினர் ஆகியோர் பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் வராத வண்ணம் இருக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், அங்கு வந்த பொதுமக்களிடம், 'கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக எப்போது வேண்டுமானாலும் ஆற்றில் நீர் வரத்து அதிகமாகலாம். எனவே, இங்கு யாரும் வரக்கூடாது' என காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயிலில் அக்.7 முதல் அக்.15 வரை நவராத்திரி திருவிழா