சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், விசாரணை படத்தை விட ஜெய் பீம் பிரமாதமான படம் அல்ல என்று கூறினார்.
மேலும் கார்த்தி சிதம்பரம், “மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு அறிக்கையை விரைவாக சமர்ப்பித்து தமிழ்நாட்டிற்கான நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும். இதில் காலதாமதமாக வழங்குவதில் எந்த நன்மையும் கிடையாது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கும் போதே அறிக்கையில் என்ன கூற போகிறார்கள் என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிவாரண தொகையை விரைவாக பெற்று தர வேண்டும்.
விவசாயிகள் போராட்டம் நியாயமானது
வேளாண் சட்டங்களை போராட்டத்தின் மூலமாக வாபஸ் பெற செய்த அனைத்த விவசாயிகளுக்கும் வீர வணக்கம். வேளாண் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி விட்டதால் முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இந்தக் கூட்டத் தொடர் தொடக்கத்தில் அரசு செய்யும் என நம்புகிறேன்.
முழுமையாக வாபஸ் என்பது நாடாளுமன்றத்தின் மூலமாக தான் செய்ய முடியும். பிரதமர் தொலைக்காட்சி உரையில் கூறினாலும் முழுமையாக வாபஸ் பெறும் வரை விவசாயிகள் போராட்டம் நியாயமானது.
பாஜகவினருக்கு பொருளாதாரம் தெரியுமா?
பொருளாதாரத்தை தெரிந்தவர்கள் பேச வேண்டும். உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு போகும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை தான். வரி சுமையை அதிகரித்து செல்கிறார்கள்.
பண மதிப்பு நீக்கத்தால் இந்திய பொருளாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. உலகத்தில் எந்த நாட்டிற்கு சென்றாலும் ஜி.எஸ்.டி. ஒரே வரியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 15 வீதமான வரி போல் இருக்காது.
பெட்ரோல், டீசல் மீது அதீத வரி
ஊரடங்கு அறிவிக்கும் போது எந்தவிதமான ஊக்க தொகையும் தரவில்லை. இந்த 3 காரணங்களால் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதால் வரி வருமானம் குறைந்தது.
வரி வருமானம் குறைந்ததால் எதில் வரி போட்டால் எல்லா தரப்பினரும் வரி கட்டுவார்கள் என்றால் பெட்ரோல், டீசல் தான். இதனால் பெட்ரோல், டீசல் மீது வரியை போடுகின்றனர்.
ஜெய் பீம், விசாரணை
பொன்.ராதாகிருஷ்ணன் அரசியலில் வயதில் என்னை விட மூத்தவர். ஆனால் பொருளாதாரத்தை பற்றி அவருக்கு நான் கற்று தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார் என்பது வருத்தமாக இருக்கிறது.
ஜெய்பீம் படம் வெளி வந்து எல்லாரும் பார்த்து விட்டார்கள்; இனி போராட்டம் நடத்தி என்ன பண்ண முடியும். ஜெய் பீம் படம் பார்த்தேன். விசாரணையை விட பிரமாதமான படம் அல்ல” என்றார்.
இதையும் படிங்க : Jai Bhim Controversy: வருத்தம் தெரிவித்தார் ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல்!