கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும், நொய்யல் ஆற்றில் அளவுக்கு அதிகமான கன உலோகங்கள் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இவை, புற்றுநோய், மலட்டுத்தன்மை, நரம்பு மண்டல நோய்களை வரவழைக்கும் எனக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலைக்காடுகளில் உருவாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பயணித்து கரூர் மாவட்டத்தின் நொய்யல் எனும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கோவையில் இருந்து 78 கிலோமீட்டர் தூரம் செல்லும் நொய்யல் ஆறு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிவருகிறது.
அதிர்ச்சி ஆய்வறிக்கை
மொத்தம் 36ஆயிரத்து 304 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெற்றுவரும் நிலையில், நொய்யல் ஆறு தற்போது அழிவை நோக்கிச் செல்கிறது என்றே கூறலாம். இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆய்வு. நொய்யல் ஆற்று நீரின் மாதிரிகள் மற்றும் ஆற்றில் வசிக்கும் நண்டுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
அதன் முடிவில், இந்திய தரத்தின்படி ஒரு லிட்டர் நீரில் 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டிய தாமிரம் 2.75 மில்லிகிராமும், 0.1 மில்லி கிராம் இருக்க வேண்டிய காரீயம் 10.74 மில்லிகிராமும், 250 மில்லிகிராம் இருக்க வேண்டிய குளோரைடு ஆயிரத்து 10 மில்லிகிராமும் உள்ளது. மேலும், 45 மில்லிகிராம் இருக்க வேண்டிய நைட்ரேட் 250 மில்லிகிராமும், 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டிய அம்மோனியா 0.50 மில்லிகிராமும், 200 மில்லிகிராம் இருக்க வேண்டிய கடினத்தன்மை ஆயிரத்து 75 மில்லிகிராமும் இருப்பது தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை
இதற்கு காரணம் நொய்யல் ஆறு சமவெளிப்பகுதியை அடைந்த உடனேயே, குடியிருப்பு கழிவுநீர், தொழிற்சாலை, சாயப்பட்டறை மற்றும் சலவை பட்டறை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் கலப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மேலும், நொய்யல் ஆற்றில் உள்ள நண்டுகளின் உடலில், ஒரு கிலோகிராமில் 30 மில்லிகிராம் இருக்க வேண்டிய துத்தநாகம் 51.72 மில்லிகிராமும், 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டிய தாமிரம் 0.22 மில்லிகிராமும், 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டிய காரீயம் 19.91 மில்லிகிராமும் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : திருப்பூர் நொய்யல் ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம்!