பொள்ளாச்சி அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த எட்டாம் தேதி பெய்த கனமழையால் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் மலைச்சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், கன மழையின் போது மலையிலிருந்து பாறைகள் விழுந்ததில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் முக்கிய கால்வாயான, காண்டூர் கால்வாயில் பாறைகள் விழுந்து 3 கிமீ தூரத்திற்கு சிதிலமடைந்துள்ளது. இந்தப் பகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து சர்கார்பதி பகுதியில் நாகூர் ஊற்று மலைகிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான இரண்டு வயது பெண் குழந்தையின் குடும்பத்திற்கு, மாநில அரசு சார்பில் ரூ.4 லட்சத்துக்கான காசோலையைப் பெற்றோரிடம் வழங்கினர். அதைத் தொடர்ந்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 22 மலைவாழ் குடும்பங்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்கினர்.
இந்த நிகழ்வுகளில் கோவை மாவட்ட ஆட்சியர் இராசமணி, வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆகியோர் கலந்துகொண்டனர்.