கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பாலப்பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதனை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ” தமிழ்நாட்டில் 10 கிலோமீட்டர் பாலம் வேறு எங்கும் கிடையாது. கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்படவுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கிராமத்திலிருந்து வந்து முதலமைச்சர் ஆகி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யாரோ எழுதிக்கொடுப்பதை பேசி, எந்த திட்டம் வந்தாலும் அதனை குறை கூறுகிறார். மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை. ஸ்டாலின் செய்வதெல்லாம் ஏமாற்று வேலை. மக்களை ஏமாற்றுவதில் அவரைப்போல கைதேர்ந்த ஒருவர் கிடையாது.
நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளையெல்லாம் ஸ்டாலின் அறிவிப்பார். இனி அவரை நம்ப மக்கள் தயாராகயில்லை. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜக மூத்தத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் பற்றிய பாஜக தலைவர் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்